Sunday, May 27, 2007

2. வறுமையை ஒழித்த லெனின்

எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும் அங்கே பணக்காரர்கள் இருப்பார்கள். அதுபோலவே ஏழைகளும் இருப்பார்கள். ஒருவன் பணக்காரன் என்றால், 100 பேர் ஏழைகள். இந்த ஏழைகளின் உழைப்பைச் சுரண்டி பணக்காரர்கள் கொள்ளை லாபம் சம்பாதிப்பார்கள். உழைக்கும் மக்கள் மேலும் மேலும் வறுமையில் வாடிக்கிடப்பார்கள். ரசியாவிலும் ஒரு காலத்தில் மக்கள் அப்படித்தான் துன்பத்தில் உழன்றனர்.

இந்த அநியாயத்தை ஒழித்துக் கட்டியவர்தான் லெனின். அவருடைய தலைமையில் 1917-ஆம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி நடைபெற்ற புரட்சியினால் தொழிலாளர்கள், விவசாயிகள் ஆட்சி மலர்ந்தது. உலகில் முதன்முறையாக தொழிலாளர்கள் ஆட்சியில் அமர்ந்தனர். அந்த தொழிலாளர்களின் ஆட்சிதான் உலகில் எங்குமே நடக்காத சாதனைகளை நிகழ்த்தியது. மனிதனை மனிதன் சுரண்டும் கொடுமைக்கு முடிவு கட்டப்பட்டது. தேசத்தின் வளங்களை ஒரு சிலர் மட்டும் அனுபவிப்பது முடிவுக்கு வந்தது. அவை அனைவருக்கும் பொதுவாக்கப்பட்டது. வயது வந்த அனைவருக்கும் திறமைக் கேற்ற வேலையும், வேலைக்கேற்ப ஊதியமும் வழங்கப்பட்டது. அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்கப்பட்டது. சமத்துவச் சமூகம் படைக்கப்பட்டது.

இவை அனைத்தும் லெனினுடைய தலைமையில் நடந்தது. இதன் மூலம் தன்னுடைய நாட்டில் வறுமையை ஒழித்துக் கட்டினார். மற்ற நாடுகளிலுள்ள உழைக்கும் மக்களின் கவனம் சோவியத் ரசியாவை நோக்கித் திரும்பியது. லெனினுடைய வழியைப் பின்பற்றினால் மட்டுமே தங்களின் வறுமை ஒழியும் என்று அவர்கள் நம்பினர். தங்களின் நல்வாழ்விற்காக போராடத் தயாராக இருந்த உலகத் தொழிலாளர்களுக்கு லெனின் சரியான வழி காட்டினார். ஆனால் ரசிய மக்களுக்குக் கிடைத்த வெற்றி உலகத்திலுள்ள அனைவருக்கும் கிடைப்பதற்கு முன்னரே அவர் மரணமடைந்து விட்டார்.

இதனால்தான் அவருடைய மரணத்துக்கு உலகமே அழுதது. உலகின் ஆறில் ஒரு பகுதி நிலப்பரப்பில் வறுமையை ஒழித்தவர் என்ற நன்றியும், மீதி நிலப்பரப்பில் அதை நிறைவேற்றும் முன்னரே இறந்து விட்டாரே என்ற துக்கமும்தான் உலகத் தொழிலாளர்களை கண்ணீர் சிந்த வைத்தது.