Sunday, May 27, 2007
15. பட்டினி கிடந்து சோசலிசத்தைப் பாதுகாத்த லெனின்
போரினால் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. தலைநகரில் உணவு தானியம் மிக அரிதாகவே கிடைத்தது. உணவுப் பிரச்சினையைப் பற்றி விவாதிக்க லெனின் அமைச்சரவையைக் கூட்டினார். அந்த கூட்டம் நடந்து கொண்டு இருந்த போதே உணவுத்துறை அமைச்சர் மயங்கி விழுந்தார். காரணம் அவர் கடந்த எட்டு நாட்களாக ஒரு வாய் உணவு கூட அருந்தவில்லை. தன் கட்டுபாட்டில் இருந்த உணவை குழந்தைகள், நோயாளிகள், பெண்கள், முதியவர் ஆகியோருக்கு விநியோகித்தார். நாட்டு மக்கள் வயிறார சாப்பிடும் போதுதான் தானும் வயிறார சாப்பிடப் போவதாக உறுதி எடுத்துக் கொண்டார். சோசலிச சோவியத் யூனியனில் மந்திரிகள் அப்படித்தான் இருந்தனர்.
அந்த தோழர் மட்டும் அல்ல லெனினும் பலநாள் பட்டினி தான். ஆனாலும் அவர் சோர்ந்து போகவில்லை. சோசலிசத்தைப் பாதுகாக்க இரவு பகலாக உழைத்தார். அவர் இராணுவத்தை வழி நடத்த வேண்டியிருந்தது. உணவுப் பிரச்சினையை தீர்க்க வேண்டியிருந்தது. கல்வி, தொழில் வளர்ச்சிக்கான திட்டம் இடுதலை நிறைவேற்ற வேண்டியிருந்தது. பொதுவுடைமைச் சமுதாயத்தை நோக்கி நாட்டை வழி நடத்த வேண்டியிருந்தது. உள்ளுக்குள் இருந்து சதி செய்த சதிகாரங்களை களையெடக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு நாளும் புதுப்புது பிரச்சினைகள் தோன்றின. அனைத்தையும் லெனினே முன்னின்று தீர்க்க வேண்டியிருந்தது.
தினந்தோறும் நாடு முழுவதும் இருந்து ஏராளமான மக்கள் லெனினைத் தேடி வந்தனர். உழைக்கும் மக்களின் மன்றமான சோவியத்தை வைத்துக் கொண்டு எப்படி ஆட்சி நடத்துவது என்று அவரிடம் கேட்டு அறிந்தனர். அவர் ஒரு நாளைக்கு இருபத்திரண்டு மணி நேரம் உழைத்தார். இந்தக் கடினமான உழைப்பினாலும், உணவுப் பற்றாக்குறையாலும் லெனினுடைய உடல்நிலை மோசமடைந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment