Sunday, May 27, 2007

14. எதிரிகளை வீழ்த்திய செம்படை

லெனின் உயிருடன் இருக்கும் வரை சோவியத் யூனியனைப் போரில் வீழ்த்த முடியாது என்பதை எதிரிகள் புரிந்து கொண்டனர். அமெரிக்காவின் கூலிப்படைகள் தலைநகருக்குள் ஊடுருவின. பல முன்னணி கம்யூனிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.

ஒருநாள் லெனின் தொழிலாளர் கூட்டம் ஒன்றில் பேசி முடித்தப் பின் அரகங்த்தை விட்டு வெளியேறி வந்தார். திடீரென துப்பாக்கி சத்தம் பேரிடி போல் ஒலித்தது. கணநேரம் தான், மூன்று குண்டுகள் லெனினுடைய உடலைத் துளைத்தன. சுட்ட துரோகியை மக்கள் வளைத்துப் பிடித்தனர். ஆனால், லெனினுடைய நிலைத்தான் மிகமோசகமாக இருந்தது. கழுத்தில் இருந்தும், நெஞ்சில் இருந்தும் ஏராளமான இரத்தம் வெளியேறிக் கொண்டு இருந்தது. சுற்றி இருந்தவர்கள் பதறிப் போனார்கள். லெனின் பதறவில்லை. உண்மையான வீரனுக்குரிய துணிவோடு தானே நடந்து சென்று காரில் உட்கார்ந்தார். கார் மருத்துவமனைக்கு பறந்தது.

அவருடைய உடல்நிலை நிமிடத்திற்கு நிமிடம் மோசமாகிக் கொண்டு இருந்தது. மருத்துவர்கள் ஆலோசனை நடத்தினர். அறுவை சிகிச்சை செய்வது அவசியம். ஆனால் அறுவையின் போது உயிர் போய்விட்டால்? மருத்துவர்கள் பயந்தார்கள். உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த லெனின் மருத்துவர்களுக்கு தைரியம் கூறினார். அறுவை சிகிச்சை நன்கு முடிந்தது. இரண்டு குண்டுகள் அகற்றப்பட்டன. ஒரு குண்டு உள்ளேயே தங்கிவிட்டன.

தங்கள் வாழ்க்கையில் விடியலை ஏற்படுத்திய சோசலித்தை வீழ்த்தவே லெனின் சுடப்பட்டார் என்ற உண்மை மக்களுக்குப் புரிந்தது. லெனின் மீதான தாக்குதலுக்கு பழி வாங்க மக்கள் சபதம் ஏற்றனர். சோசலிசத்தை வெற்றி பெறச் செய்வதன் மூலம் தான் எதிரிகளை பழிவாங்க முடியும். ஒரு வருடத்தில் உற்பத்தி செய்ய வேண்டியப் பொருட்களை ஆறு மாதத்தில் உற்பத்தி செய்யப் போவதாக தொழிலாளர்கள் உறுதி பூண்டனர். எட்டு மணி நேர வேலை நேரத்திற்கு பிறகு மேலும் நான்கு மணி நேரம் இலவசமாக, சம்பளம் வாங்காமல் வேலை செய்தனர்.
எதிரிப் படைகளை முறியடிக்க செம்படை உறுதி பூண்டது. மேலும் அதிக வீரத்துடன் போரிட்டது. லெனின் சுடப்பட்ட அடுத்த நாள் அவருடைய சொந்த ஊரான சிம்பிர்ஸ்க் நகரம் மீட்கப்பட்டது. செம்படையின் வெற்றி துவக்கியது.

No comments: