ஒரு உயர்ந்த மேடை மீது நின்று கொண்டு லெனின் பேசத் தொடங்கினார். தோழர்களே! உங்களுடைய வீரத்தினால் கொடுங்கோலன் ஜாரை வீழ்த்திவிட்டீர்கள். ஆனால் வெற்றி இன்னும் முழுமை அடையவில்லை. ஜாரின் அதிகாரத்தை முதலாளிகளும், பண்ணையார்களும் கையில் எடுத்துக் கொண்டுள்ளனர். பணக்காரர்கள் ஏழைக்களைச் சுரண்டுவதையே இவர்கள் ஆதரிப்பார்கள். பிற நாடுகளைக் கொள்ளையடிக்க போரைத் தொடர்ந்து நடத்துவார்கள். இவர்களை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு உழைக்கும் மக்கள் அதிகாரத்திற்கு வரவேண்டும். சோசலிசம் ஒன்றுதான் தீர்வு. தொடர்ந்து முன்னேறுங்கள் என்று அறைகூவினார்.
லெனினுடைய வார்த்தைகளை நம்பிய தொழிலாளர்கள் சிறுபான்மையினராகவே இருந்தனர். பெரும்பாலானவர்கள் முதலாளிகளுடைய நாடாளுமன்றத்தின் மீது நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கை பொய்த்துப் போனது. புதிய அரசு போரில் உழைக்கும் மக்கள் வீணாக சாவதைப் பற்றி கவலை கொள்ளவில்லை. ஏழைகள் பட்டினியால் மாண்டனர். பணக்காரர்கள் தேசத்தின் செல்வத்தை உறிஞ்சிக் கொழுத்தனர். நாடாளுமன்றத்தில் அடிதடியும் ரகளையும் தான் நடந்தது. மக்கள் அதன் மீது நம்பிக்கை இழந்தனர். லெனினுடைய கருத்துக்களே சரியானவை என ஏற்கத் தொடங்கினர்.
மக்களை ஒடுக்குவதற்காக புதிய அடக்குமுறைச் சட்டங்கள் இயற்றப்பட்டன. கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. லெனினைக் கொலை செய்யும்படி படைகளுக்கு கட்டளையிடப்பட்டது. மீண்டும் ஒரு முறை லெனின் தலைமறைவாக செல்ல வேண்டியிருந்தது. ஆனால் இந்தமுறை அவர் பெத்ரோகிராடை விட்டு வெகுதூரம் செல்லவில்லை. எப்படியும் புரட்சி வெடிக்கும் என்று நம்பினார். அதனால் பெத்ரோகிடின் அருகிலேயே தங்கினார்.
புல் அறுப்பவராக, கூலி விவசாயியாக, என்ஜின் டிரைவராக மாறுவேடம் பூண்டு வெவ்வேறு இடங்களில் தங்கினார். ஹெல்சிங்கி நகரில் லெனின் தங்கியிருப்பதாக அரசு சந்தேகப்பட்டது. அந்தநகரின் மூலைமுடுக்குகளெல்லாம் வலைவீசித் தேடியது. ஒரு இளம் காவல் துறை அதிகாரியிடம் லெனினைப் பிடிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இதில் குறிப்பிட வேண்டிய விசயம் என்னவென்றால், அந்த அதிகாரியின் வீட்டில் லெனின் பாதுகாப்பாகத் தங்கியிருந்தார். ஒரு தொழிலாளியின் மகனான அந்த இளம் காவல் அதிகாரி கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்தார்.
மக்களின் கோரிக்கைகளான போர் நிறுத்தம், உழுபவனுக்கு நிலம், உழைப்பவனுக்கு அதிகாரம் போன்றவற்றை கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே செயல்படுத்த முடியும் என மக்கள் புரிந்து கொள்ளத் தொடங்கினர். ரசியாவெங்கும் மீண்டும் கொந்தளிப்பு ஏற்பட்டது. புரட்சிக்கான காலகட்டம் நெருங்கிவிட்டது. என லெனின் உணர்ந்து கொண்டார். உடனடியாக தொழிலாளர்கள் ஆயுதப் போராட்டத்தை தொடங்க வேண்டும் என்றும் கட்சி அதற்கு தலைமை தாங்க வேண்டும் என்றும் அவர் கூறியதைக் கட்சியின் மையக் குழு ஏற்றுக் கொண்டது.
ஆனால் மைக்குழுவில் இருந்த பயந்தாங்கொள்ளிகள் இத்திட்டத்தை எதிர்த்தனர். அதுமட்டுமல்ல, மிக இரகசிமான இந்த திட்டத்தை பத்திரிகைகளுக்கு வெளிப்படுத்தி துரோகம் செய்தனர். ஆகவே திட்டத்தில் குறிப்பிட்டிருந்த நாளுக்கு முன்பாகவே நவம்பர் 7-ம் தேதி புரட்சியைத் தொடங்க முடிவு செய்தார் லெனின். இத்தகவல் பெத்ரோகிராடு நகரத் தொழிலாளர்களுக்கு ரகிசயமாக கொண்டு செல்லப்பட்டன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment